எதிர்கால மனித குலத்துக்கு 90 சதவீதம் கடலுணவு!

peoplenews lka

எதிர்கால மனித குலத்துக்கு 90 சதவீதம் கடலுணவு!

உலகில் பறந்து விரிந்துகிடக்கும் சமுத்திரங்களை நம்பி பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பெருங்கடலில் இருந்து மனிதனுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் முதல் வாசனைப் பொருட்கள் போன்ற ஆடம்பரப் பண்டங்கள் வரை கிடைக்கப் பெறுகின்றன.


இந்நிலையில் எதிர்காலத்தில் மனித குலத்துக்குத் தேவையான உணவில், 90 சதவிகிதம் கடலிலிருந்தே பெறப்போகிறோம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


அத்தகைய கடல் உணவுகளை மழை, வெயில், புயல், எனப் பாராது கரைக்குக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள் மீனவர்கள். அந்த மீனவர்களுக்கான தினமாக நவம்பர் 21 ஆம் திகதியை மீனவர்கள் உலக மீனவர்கள் தினமாக கடைபிடித்துவருகின்றனர்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையோ இந்த தினத்தை 'மீனவர் தினமாக' அங்கிகாரம் செய்யாமல் கடந்த 20 ஆண்டுகளாக காலம் கடத்திவருகின்றது.

1990 காலகட்டத்தில் உலகமய கொள்கை தீவிரமடைந்த சூழலில். பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் கண்களை கடல் வளம் உறுத்தியது. இதன் விளைவாக பாய்மரப் படகுகள் உலாவந்த கடலில் பெரும் கப்பல்கள் அணிவகுக்கின்றன.

படிப்படியாக பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைத் தளமாக பெருங்கடல்கள் மாறியுள்ளன. மொத்த கடலுணவு வளத்தில் 52 சதவிகிதம் சுரண்டப்பட்டுவிட்டது. கடலையே நம்பி இருந்த கடல்சார் பழங்குடியின மக்களின் கடலும் கடல்சார் நிலமும் பறிக்கப்பட்டது. எனவே பூகோளமயமாக்கல் சுரண்டலின் கரங்கள் சர்வதேச ரீதியில் பரந்து விரித்து கிடக்கும்போது அதை எதிர்க்கும் போராட்டமும் உலகளாவிய அளவில் தேவை என்று மீனவர்கள் உணர்ந்தனர்.

மேலும் மீனவர்கள் கடலில் தங்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பல உலகளாவிய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் 40 நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997 அன்று டெல்லியில் கூடி விவாதித்து உலக அளவில் இணைந்து மீனவர் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராடுவதற்காக உலக மீன்பிடித் தொழிலாளர்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர்.

இதன்மூலம் மீனவர்களுக்கு எதிராக அரசாங்கங்கள் கொண்டுவரும் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள், பாரம்பரிய மீனவர்கள் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் மாசடைந்து மீன்வளம் குன்றி மீன்பிடித் தொழில் அழிவுப் பாதையில் செல்வது உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடிவு எடுக்கப்பட்ட நாளான நவம்பர் 21-ம் திகதியே சர்வதேச மீனவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.

மீனவர் தினம் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக இன்று வரை உலகம் முழுவதும் உள்ள மீனவர்கள் இந்தத் தினத்தை மீனவர்கள் தினமாக அனுஷ்டிக்கிறார்கள்.

ஊட்டச்சத்து மிக்க மீன்களை கிடைக்கச் செய்வதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஆனால் இத்தொழிலில் பாதுகாப்பின்மை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உயிரைப் பணயம் வைத்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோர் புயல், சூறைக்காற்று, கடல்சீற்றம் போன்றவற்றால் பாதி நாட்களுக்கு மேல் தொழிலுக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு ராணுவ வீரனின் மனைவியை விட மீனவனின் மனைவிக்குத்தான் அதிகம் துணிச்சல் தேவை. ராணுவ வீரனின் மனைவி போர் வரும்போது கணவன் குறித்த பயத்தில் வாழ்கிறாள். மீனவனின் மனைவி கணவன் கடலுக்குள் சென்று வரும் போதெல்லாம் பயத்தில் வாழ்கிறாள் என்கிறது 'பேராசிரியர் வறிதையா கான்ஸ்டண்டைன் எழுதிய 1000 கடல் மைல்' என்னும் நூல்.

கடலில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் இலங்கை - இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் மேற்குலக நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர். மேலும் பலர் காயமடைவதுடன் மீண்டும் தொழிலுக்கு செல்லமுடியாத நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.

உலக மீனவர் தினத்தை அந்த துறையின் அபிவிருத்தி அல்லது மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுப்பதற்காக பயன்படுத்தினாலும் அதன் மறுபக்கத்தில் உள்ள இன்னல்களை பற்றி உலகம் சிந்திப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.

சுனாமி, புயல், போன்ற பேரிடர்கள் தவிர சாதாரண சூழலில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் படகில் இருந்து கீழே விழுவது, படகு கவிழ்வது, கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவது, கப்பல்கள் மோதுவது, ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்டு உரிய சிகிச்சை பெறமுடியாமல் போகும் சந்தர்ப்பங்களால் பாதிக்கப்படுகின்றனர்.

மீனவர்களுக்காக எவ்வளவோ திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் எல்லா மீனவர்களுக்கும் அது தெரிவதில்லை. மீனவர் தினத்தில் மீனவர்களுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் கோடிகளில் துறைமுகங்கள் கட்டும் அரசாங்கங்கள் அங்கே கொண்டு வந்து சேர்க்கும் மீனவர்களையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே உலக மீனவர் தினத்தில் எல்லோருடைய விருப்பமுமாகும்.

"மரபறிவு இன்னும் முழுமையாக அற்றுப்போகாத மீன்பிடித்தொழிலையும் மீனவர்களையும் அவர்களின் வாழ்வான மீனவளத்தையும் போற்றும் உலக மீனவர் தினம் "

Share on

தேஜா பதிவுகள்

peoplenews lka

அனுமதியின்றி ட்ரோன் கமராவினை இயக்கிய 2 பேர் கைது......

விக்டோரியா அணை, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் 4 ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை.. Read More

peoplenews lka

இந்திய பெருங்கடல் இன்று சீன பெருங்கடலாக மாறுகிறது...

சீனா மிகப் பெரிய தேசம். உலகில் அதிகூடிய சனத்தொகை உடைய நாடு. மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி உடைய நாடு. இன்று மிகத் திடமான பொருளாதாரப் பின்னணியை பெற்றுள்ள நாடு.. Read More

peoplenews lka

1860 இல் இலங்கையை உலகில் முன்னிலை நாடாக மாற்றிய மலையக தமிழ் விவசாயிகள்....

1860 இல் இலங்கையை உலகில் முன்னிலை நாடாக மாற்றிய மலையக தமிழ் விவசாயிகள்... Read More

peoplenews lka

ஏழைகளுக்கு கிட்டுமா கொவிட்19 தடுப்பு மருந்து?...

கொரோனா தடுப்பூசி பற்றிய செய்தி எமக்காகவா?.. Read More